


மதுரையில் வருகின்ற 20 ஆம் தேதி அதிமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மாவட்டங்கள் தோறும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது. கடுமையான எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை மதுரைக்கு அழைத்து வரும் மதுரையின் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ க்கு எதிர்ப்பு தெரிவித்து செல்லூர் பகுதியில் செல்லூர் ராஜு வீட்டின் எதிரே சீர்மரபினர் திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை சாணியால் அடித்து எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஈடுபட்டனர்.
குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி 10.5சதவீதம் இட ஒதுக்கீட்டில் சீர்மரபினருக்கு துரோகம் செய்துவிட்டதால் மதுரை மாநாட்டிற்கு வருவதால் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீர்மரபினர் ஊர்வலமாக சென்று செல்லூர் ராஜு வீட்டை முற்றுகையிட முயன்றனர். அங்கு வந்த செல்லூர் காவல்துறையினர் அவர்களிடம் கலைந்து போக சொல்லி கேட்டுக் கொண்டதால், பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.


