தேனி மாவட்டம் பங்களாமேட்டில், லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்திற்கு நீதி கேட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பாலகிருஷ்ணன் மரணம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்து, உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், உயிரிழந்த பாலகிருஷ்ணனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், தமிழகத்தில் காவல் நிலைய மரணங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள், எந்தவித முகாந்திரமும் இன்றி பாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைத் துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டினர். மேலும், அவரது மரண அறிக்கை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் சுமதி ஆகியோர் எழுப்பிய கேள்விகளையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

சாதாரண வழக்கை உதவி ஆய்வாளர் நிலையில் விசாரிக்காமல், காவல் ஆய்வாளர் விசாரணைக்கு எடுத்துச் சென்றது ஏன்? என்ற கேள்வியையும் எழுப்பினர்.
எனவே, பாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற காவல் நிலைய மரணங்கள் இனி நிகழாமல் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


