• Fri. Apr 19th, 2024

உ.பி.யில் பாஜகவை வெல்ல வியூகம் அமைக்கும் பிரியங்கா

Byமதி

Nov 6, 2021

உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜகவை வெல்ல பிரியங்கா, மாயாவதியின் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி), மறைந்த அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) ஆகிய கட்சிகளுடன் கூட்டணிக்கு முயற்சி செய்து வருகிறார்.

உ.பி.யில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இங்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க முயற்சிக்கும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. இதில், முன்னாள் முதல்வர் அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி, சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கிறது. மற்றொரு எதிர்க்கட்சியான காங்கிரஸ்,
உ.பி.யின் முக்கியக் கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைக்க முயற்சிக்கிறது. மாயாவதியின் பிஎஸ்பி மற்றும் மறைந்த அஜித் சிங்கின் மகனான ஜெயந்த் சவுத்ரியின் ஆர்எல்டி கட்சியை தன்னுடன் கூட்டணி சேர்க்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.

கடந்த வாரம் லக்னோ விமான நிலையத்தில் ஜெயந்த் சவுத்ரியை சந்தித்தார் பிரியங்கா. அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜெயந்துடன் கூட்டணி பேச்சும் தொடங்கினார்.

மேற்கு உ.பி.யில் அதிகமுள்ள ஜாட் சமூகத்தினரின் ஆதரவை ஆர்எல்டி பெற்றுள்ளது. இதன் ஆதரவின்றி காஜியாபாத், அலிகர், புலந்த்ஷெஹர், ஆக்ரா, மீரட், மதுரா, முசாபர்நகர், ஷாம்லி, பிஜ்னோர் ஆகிய மாவட்டங்களில் வெல்வது கடினம் என்ற சூழல் உள்ளது. இந்நிலையில் ஜெயந்துடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் ரகசியப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

உ.பி.யில் கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதியுடன் ஆர்எல்டி கூட்டணி அமைத்தது. இக்கூட்டணி எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் தொடரும் என ஆர்எல்டி அறிவித்துள்ளது. என்றாலும் அதற்கான தொகுதி உடன்பாடு இதுவரை ஏற்படாத நிலையில் காங்கிரஸுடன் கைகோக்க அக்கட்சி தயாராகி வருகிறது.

இதையடுத்து மாயாவதியுடனும் பேச்சுவார்த்தை நடத்த பிரியங்கா தயாராகி வருகிறார். இவரது கட்சி மூலம் உ.பி.யின் தலித்துகள் ஆதரவைப் பெற பிரியங்கா திட்டமிடுகிறார். ஏற்கெனவே, ஓரளவுக்கான முஸ்லிம்கள் ஆதரவு காங்கிரஸிடம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *