நாடாளுமன்றத்தில் திடீர் திடீரென சட்ட மசோதாவை தாக்கல் செய்து அதை சட்டமாக நிறைவேற்றுகிறார் என பிரதமர் மோடி மீது திமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
ஆனால் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலைக் கழகங்கள் சட்டத் திருத்தமும் இந்த வகையில்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
உயர்கல்வியை தனியார்மயத்தை நோக்கித் தள்ளும் வகையில், தனி யார் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதா இருப்பதாக விமர்ச னங்கள் எழுந்த நிலையிலும், இந்த சட்டத் திருத்த மசோதாவை, திமுக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி யுள்ளது என திமுகவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே குற்றம் சாட்டியுள்ளது.
2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத்தில் மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவு, தமிழக சட்டமன்றத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனால் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது.

அரசு உதவி பெறும் தனியார் கல் லூரிகள் உள்ளிட்டவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுகிற திருத்தம், மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்புக்கு எதிரானது. தனி யார் பல்கலைக்கழகத்திற்கு குறைந்த பட்சம் 100 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி, மாநகராட்சிப் பகுதிகளில் 25 ஏக்கர், நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதி களில் 35 ஏக்கர், இதர பகுதிகளில் 50 ஏக்கர் இருந்தாலே பல்கலைக்கழகம் ஆரம்பிக்கலாம் என்று சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட முன்வடிவு உயர்கல்வியை மேலும் தனியார்வசம் ஒப்படைப்ப தாகவே அமையும். இத்தகைய சட்ட முன்வடிவு உயர்கல்வி மேம்பாட்டை பின்னோக்கித் தள்ளுவதாகவே அமையும். குறிப்பாக, ஓபிசி, எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிப்பதாக இருக்கும். மேலும், மக்களின் வரிப் பணத்தி லிருந்து உருவாக்கப்பட்ட, வளர்த்தெடுக்கப்பட்ட அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களை தனியார் லாப வேட்டைக்கு அனுமதிப்பது ஆகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் வி.பி. நாகை மாலி மற்றும் துணைத் தலைவர் மா. சின்னதுரை ஆகியோர் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்தும் முறையிட்டனர்.
மேலும், இதுபோன்ற மசோதா 15 ஆண்டு களுக்கு முன்பு, கலைஞர் ஆட்சிக் காலத்திலேயே முயற்சிக்கப்பட்டு, கடும் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டதையும் சுட்டிக்காட்டினர். அதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துப் பேசினர்.
இந்நிலையில், அக்டோபர் 17 ஆம் தேதி இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த சட்டத் திருத்த மசோதா வழியாக தமிழ்நாடு அரசின் சமூக நீதி கொள்கையும், இட ஒதுக்கீட்டு நடைமுறைகளும் கைவிடப்படும். தனியார் பல்கலைக்கழகங்கள் புற்றீசல்கள்போல் தோன்றும் பேரபாயம் உருவாகும்.
இது குறித்து உயர் கல்வித்துறை நிபுணர்கள், மூத்த பேராசிரியர்கள், மாணவர் அமைப்புகள் என பல தரப்பினரும் கூறியுள்ள கருத்துக்களை அரசு பரிசீலித்து, தனியார் பல்கலைக் கழக சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் பல்கலைக் கழகமாக மாற்றப்படும் பட்சத்தில் என்ன விளைவுகள் ஏற்படும்?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூற்றுப்படி,

“அரசு உதவி பெறும் கல்வி நிலையங்கள் தனியார் பல்கலைக் கழகங்களாக மாற்றப்பட்டால், தற்போது நடைமுறையில் உள்ள கல்விக் கட்டணம் பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது.
உதாரணமாக தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பிகாம் படிப்புக்கு தற்போது ஆண்டுக் கட்டணம் 8 ஆயிரத்து 60 ரூபாய். இதுவே சுய நிதிக் கல்லூரிகளில் 60 ஆயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை உல்ளது. தனியார் பல்கலைக் கழகங்களில் இதைவிட அதிகமாக இருக்கும்.
தற்போது 161 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 8.367 பேராசிரியர்களும், 3508 அலுவலர்களும் பணியாற்றுகிறார்கள். தனியார் பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டால் இவர்களின் ஊதியத்தில் பெரும் சரிவு ஏற்படும்.
தனியார் பல்கலைக் கழகமாக மாறினால் அவை அரசிடம் இருந்துஎந்த நிதி உதவியையும் மானியத்தையும் கோர முடியாது என்று சட்டத்திலேயே உள்ளது. இன்னும் பற்பல விளைவுகளை இந்த சட்டம் ஏற்படுத்தும். இதனால் இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்” என்கிறார்.
கல்வியாளர்களும் கூட இந்த சட்டத்தின் விளைவுகளைப் பற்றி எச்சரிக்கிறார்கள். சமூக நீதி சமூக நீதி என்று பேச்சுக்கு பேச்சு சொல்லும் முதல்வர் ஸ்டாலின் தனது கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் விமர்சனத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?













; ?>)
; ?>)
; ?>)