• Wed. Apr 24th, 2024

தனியார் பஸ்களில் அதிக கட்டணம்
வசூலிப்பதை தடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

பண்டிகை காலங்களில் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து முறைப்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொங்கல் பண்டிகை, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசியப் பண்டிகைகள் வரும்போது அதனையொட்டி சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்கள் வந்தாலோ அல்லது ஓரிரு நாட்கள் விடுப்பு எடுத்தோ தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதை அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதுபோன்ற நாட்களில் ரயில் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்ய டிக்கெட் கிடைக்காதவர்கள் தனியார் பேருந்துகளை நாடுவதும், தனியார் பேருந்து நிறுவனங்கள் இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அதிக கட்டணம் வசூலிப்பதும் வாடிக்கையாக இருந்து வருகின்றது.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியதோடு, இது ஒரு பகல் கொள்ளை என்றும் விமர்சித்து இருந்தார். ஆனால், இன்று அவர் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், பண்டிகை காலங்களில் தனியார் பேருந்து நிறுவனங்களால் வசூலிக்கப்படும் கட்டணம் அளவுக்கு அதிகமாக உள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்தும், நடவடிக்கை ஏதுமில்லை. மாறாக, தனியார் பேருந்துகளின் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ய முடியாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கிறார். அமைச்சரின் இந்தப் பேச்சு, தனியார் பேருந்து கட்டண வசூலை மேலும் அதிகரித்துள்ளது. ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கின்றபோது ஒரு பேச்சு. ஒருவேளை இதுபோன்று மாறி, மாறி பேசுவதுதான் திராவிட மாடல் போலும்!
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பணடிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு 2,500 ரூபாய், திருநெல்வேலி செல்வதற்கு 3,300 ரூபாய், கொச்சின் செல்வதற்கு 3,000 ரூபாய் என தங்களுக்கு ஏற்றாற்போல், தங்களின் விருப்பப்படி தனியார் நிறுவனங்கள் ஏழை, எளிய மக்களிடமிருந்து கட்டணங்களை வசூலித்தன. இந்தக் கட்டணம் சாதாரண நாட்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட மூன்று மடங்கு அதிகம். எனவே, முதல்வர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, பண்டிகைக் காலங்களில் தனியார் பேருந்து நிறுவனங்களால் வசூலிக்கப்படும் அபரிமிதமான கட்டணத்தை முறைப்படுத்தவும், தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதைத் தடுக்கவும், அதிக அளவிலான அரசுப் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *