• Sat. Apr 27th, 2024

பிரதமரின் தமிழக வருகை! மதுரையில் ஹெலிகாப்டர் ஒத்திகை; பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்:

ByN.Ravi

Feb 26, 2024

பிரதமர் வருகையையொட்டி, மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. வீரபாஞ்சான் பகுதியிலுள்ள ஹெலிபேடு தளத்தில் ஒத்திகை நிகழ்வும் நடந்தது.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி பிப். 27-ம் தேதி பகல் 1.20 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து கோவையில் உள்ள சூலுார் விமான படைத்தளத்துக்கு பகல் 2.30 மணிக்கு வருகிறார். தொடர்ந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடத்துக்குச் செல்லும் அவர், பிற்பகல் 2.40 மணிக்கு பல்லடம் மாதப்பூர் ஊராட்சி பகுதியில், நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இதன்பின், பல்லடத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மாலை சுமார் 5 மணிக்கு மதுரை விமான நிலையத்தை அடையும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் வழியாக மதுரை கருப்பாயூரணி வீரபாஞ்சானிலுள்ள, டி.வி.எஸ். லட்சுமி பள்ளி வளாக ஹெலிபேடில் வந்திறங்குகிறார். இதன்பின், 5.15 மணிக்கு டிவிஎஸ் பள்ளி வளாகத்தில் நடக்கும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கில் பங்கேற்று பேசுகிறார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு சாலை மார்க்கமாக 6.45 மணிக்கு மதுரை பசுமலையிலுள்ள தாஜ் ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார். பிப். 28-ம்தேதி காலை 8.15 மணிக்கு தாஜ் ஓட்டலில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர், 8.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு சென்று அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
பிரதமரின் வருகையொட்டி, மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இடங்கள் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் வருவதால், தென்மண்டல ஐ.ஜி. என்.கண்ணன் ஆலோசனை பேரில், டிஐஜி ரம்யாபாரதி மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் நடக்கின்றன.
இது குறி்து போலீஸார் கூறுகையில், “கடந்த 3 நாட்களுக்கும் மேலாக டிவிஎஸ் பள்ளி வளாகம் மற்றும் அருகிலுள்ள ஹெலிபேடு தளத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து சோதனை நடத்துகின்றனர். தென் மாவட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் இன்று மதுரை வரவழைக்கப்பட்டு, தொடர்ந்து, கண்கணிக்கின்றனர். ஹெலிபேடு தளத்தில் 3 ஹெலிகாப்டர்கள் இறங்கும் வசதி இருக்கிறதா என, விமானப் படை அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர்.
தேசிய பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட தொழில் பாதுகாப்பு படையினர் 3 பிரிவாக பிரிந்து கடந்த 2 நாட்களாகவே மதுரை விமான நிலையம், டிவிஎஸ் பள்ளி வளாகம் மற்றும் பசுமலை தாஜ் ஓட்டல் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். காவல் ஆணையர் லோகநாதன், தென்மண்டல ஐ.ஜி. என். கண்ணன், டிஐஜி ரம்யா பாரதி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது, நேரில் சென்று பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கண்காணிக்கின்றனர்.
கருத்தரங்கு நிகழ்வு நடக்கும் இடம் மற்றும் ஹெலிபேடு உள்ளிட்ட பகுதிகள், மதுரை – வரிச்சியூர் ரோடு பகுதியை நாளை ( பிப்.26) தேசிய பாதுகாப்பு படையினர், என்ஐஏ மற்றும் பிரதமருக்கான பிரத்யேக பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு வளையத்
துக்குள் கொண்டு வரப்படும். தமிழ்நாடு போலீஸார் சுற்றுவட்டார பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடுவர். பிரதமரின் வருகையையொட்டி, ஏற்பாடு செய்து பாதுகாப்பு பணியை ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் திங்கட்கிழமை மதுரை வருவார் என, எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.
பாரத பிரதமர் மதுரை வருகையையொட்டி, மதுரை கருப்பாயூரணி பகுதிகளில் சாலைகளில் போடப்பட்டுள்ள வேகத் தடைகள் அகற்றப்பட்டுள்ளது.
சாலைகளில் இரு புறங்களிலும் தூய்மைப் பணிகளை, மாநகராட்சி, ஊராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *