துடிப்பான இந்தியா’ திட்டத்தின் கீழ், இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நாளை (ஆக.26-ம் தேதி) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த 15,000 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
விண்ணப்பதாரர் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 9,10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.75,000 மற்றும் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,25,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.தேசிய தேர்வு முகமை நடத்தும் YASASVI நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.கணினி அடிப்படையில் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 26-ம் தேதி (நாளை) கடைசி நாளாகும். வரும் 31-ம் தேதி வரை திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.
செப்டம்பர் 5-ம் தேதி நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு, 11-ம் தேதி தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.