• Tue. Apr 30th, 2024

ஊழலற்ற தமிழகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள்-ஜே.பி.நட்டா பேச்சு

Byகதிரவன்

Apr 16, 2024

ஊழலற்ற தமிழகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள் – பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரிவேந்தர் ஆதரித்து பிஜேபி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் முசிறியில், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து நடத்தப்பட்ட வாகன பேரணியில் கலந்து கொண்டார். இதற்காக கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு முசிறி,
சிட்டிலரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் தரையிறங்கினார்.

அங்கிருந்து காரில் புறப்பட்ட நட்டா முசிறி – துறையூர் ரவுண்டானாவில் இருந்து கைகாட்டி வரை வாகன பேரணியில் ஈடுபட்டார். அப்போது சாலையின் இருபுறமும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் நட்டாவிற்கு மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் அவர்களிடையே உரையாற்றிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி.நட்டா..,

10 கோடி இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 18,000 கிராமங்கள் மின் வசதி பெற்றுள்ளது. 10 கோடி கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளது. பெண்கள் மேம்பாடு அடைய, தலை நிமிர்ந்து நடப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் ஐந்தாண்டுகளில் 3 கோடி வீடுகள் கட்டி தரப்படும் என மோடி வாக்குறுதி அளித்துள்ளார். அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 உதவித்தொகை 3 தவணைகளில் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் 48 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலைகள் போடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் ஆயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 4800 கிலோமீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1000 கிலோ மீட்டர் அளவிற்கு நெடுஞ்சாலை போடப்பட்டுள்ளது. இது தவிர 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் வட இந்தியா மட்டுமல்ல உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தமிழைப் பற்றி பேசுவதன் மூலமும் பாராளுமன்றத்தில் செங்கோல் வைத்ததன் மூலம் தமிழ் கலாச்சாரத்திற்கு மொழிக்கு கலாச்சாரத்திற்கு ஊக்கமளிக்கிறார். ராகுல்காந்தி அமேதியில் வெற்றி பெற முடியாது என்பதால் தென்னிந்தியாவில் நிற்கின்றார்.

தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். லஞ்சத்தை ஒழிப்பதே மோடி தனது லட்சியமாக கொண்டுள்ளார். ஊழலற்ற தமிழகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோள். காசி தமிழ் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் காசிக்கு செல்வதும், காசி மக்கள் தமிழகத்திற்கு வருகை தருவதும் ஒரு கலாச்சார பரிமாற்றத்தை உருவாக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *