

இந்தியாவில் கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மாலை 4.30 மணியளவில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் கொரோனா பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் இதுவரை 3,623 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்றிலிருந்து 1,409 பேர் குணமடைந்த நிலையில் 2,214 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா-1,009, டெல்லி-513, கர்நாடகா-441, ராஜஸ்தான்-373, கேரளா-333, தமிழகம்-185 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் 1,59,632 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,90,611ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 3,44,53,603 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 4,83,790 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
