

கடந்த 2014-ல் மோடி முதன்முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். அதுமுதற்கொண்டு தொடர்ச்சியாக தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவத்தினருடன் அவர் கொண்டாடி வருகிறார். கடந்த ஆண்டு ராஜஸ்தானில் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்ற மோடி, ராணுவத்தினருடன் தீபங்களை ஏற்றினார்.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் விமர்சையாக நடைபெறவில்லை.தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால், கொண்டாட்ட நிகழ்ச்சிகள் மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் ஏராளமானோர் தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகளையும், பட்டாசுகளையும் வாங்கி குவித்து வருகின்றனர்.
இதற்கிடையே கொரோனா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக மோடி, ராணுவத்தினருடன் தீபாவளியை கொண்டாடுவாரா என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில் ஜம்மு நோவ்ஷேராவில் உள்ள ராணுவ முகாமில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
