குடியரசுத்தலைவரின் தமிழக வருகையை முன்னிட்டு மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் இரண்டு நாள் பயணமாக நாளை தமிழகம் வர உள்ளார். அவரது இந்த தமிழக பயணத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குடியரசுத்தலைவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய இருக்கிறார். அவர் நாளை டெல்லியிலிருந்து புறப்பட்டு நண்பகல் 12 மணிக்கு மதுரை வருகிறார்.
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவரது பாதுகாப்புக் குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர், மேலும் மதுரை மாவட்ட ஆட்சியரும் கோவிலின் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். மதுரையில் உள்ள அனைத்து ஓட்டல்களில் தங்கியுள்ளவர்களின் விவரங்களையும் பாதுகாப்புக் குழுவினர் சேகரித்து வருகின்றனர். ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மதுரை மாவட்டத்தில் பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத்தலைவர் இதனை முடித்துக்கொண்டு நாளை மாலை கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரியில் பங்கேற்க அங்கு செல்கிறார். அவரது வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடியரசுத்தலைவராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக திரௌபதி முர்மு தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை மதுரை வருகிறார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு
