
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்கும் சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் என்பது இளைஞர்கள் உள்ளிட்டோரின் உயிர்களை பறிக்கும் ஆட்டமாக உள்ளது. ஏராளமானோர் தங்கள் செல்போனில் ஆர்வத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடுகின்றனர். தொடக்கத்தில் பணத்தை பெற்றாலும், மீண்டும் மீண்டும் விளையாடும்போது பணத்தை இழக்கின்றனர். இதனால் பலரும் லட்சக்கணக்கான பணத்தை இழந்து, பின்னர் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துக்கொள்ளும் சோகமும் நடந்துள்ளது. இதற்கு முடிவுகட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், ஆன்லைன் கேமிங் என்பது உலகம் முழுவதும் வேகமாக விரிவடைந்து வரக்கூடிய சூழலில், இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த விவரங்களை மத்திய அரசும் அறிந்து வைத்திருக்கிறது.
