• Thu. Mar 28th, 2024

பதவி விலகல் கடிதம் கொடுத்தேன் போப் பிரான்சிஸ் தகவல்

போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களிலேயே, பதவி விலகல் கடிதம் கொடுத்ததாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போற்றப்படுபவர் போப் பிரான்சிஸ். நேற்று முன்தினம் தனது 86-வது பிறந்த நாளை கொண்டாடிய இவர், சமீப காலமாக உடல் நலப்பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். மூட்டு பிரச்சினை உள்ளிட்டவற்றால் நடப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றார். இந்த நிலையில் ஸ்பெயின் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த போப் பிரான்சிஸ், தான் 2013-ம் ஆண்டு போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சில நாட்களிலேயே, உடல் நலப்பிரச்சினையை முன்வைத்து பதவி விலகல் கடிதம் கொடுத்ததாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், எனது பணி துறத்தல் கடிதத்தை அப்போதைய வாடிகன் வெளியுறவு செயலாளர் டார்சிசியோ பெர்டோனிடம் ஏற்கனவே கொடுத்து விட்டேன். அதாவது மருத்துவ காரணத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ எனது கடமைகளை செய்ய முடியாமல் போனால், இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தேன் என தெரிவித்தார். வாடிகன் வெளியுறவு செயலாளர் பதவியில் இருந்து டார்சிசியோ பெர்டோன் பின்னர் விலகியதால், அந்த கடிதத்தை தற்போதைய செயலாளர் பியட்ரோ பரோலினிடம் ஒப்படைத்திருப்பார் என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்தார். வாடிகன் வரலாற்றில் மிக அரிய நிகழ்வாக முந்தைய போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் பதவி விலகி இருந்தார். அதை போப் பிரான்சிஸ் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *