• Thu. May 2nd, 2024

பொங்கல் பண்டிகை : உயரப்பறக்கும் விமான டிக்கெட் விலை..!

Byவிஷா

Jan 13, 2024

பொங்கல்பண்டிகையை முன்னிட்டு, விமான டிக்கெட்டின் விலையானது, கிடுகிடுவென உயர்ந்து அந்த விமானம் போல் உயரப் பறப்பதாக பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். வார இறுதி நாட்கள், பொங்கல் பண்டிகை என தொடர் விடுமுறை என்பதால், வெளியூரில் பணிபுரிபவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இதன் காரணமாக பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாகவும் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இருப்பினும், மக்கள் கூட்டம் அலைமோதுவதால், இதனை சாதகமாக பயன்படுத்தி பயணக் கட்டணங்களின் விலை பன்மடங்கு உயர்த்தி வருகின்றன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில், பேருந்துகள் மட்டுமன்றி, விமான பயணக் கட்டணங்களின் விலையும் கிடுகிடுவென பன்மடங்கு உயர்ந்துள்ளது. அந்தவகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.
அதன்படி, மதுரை, தூத்துக்குடி, கோவை, திருச்சி, பெங்களூருவுக்கு வழக்கமாக ரூ.4,000, ரூ.7,000 ஆக இருக்கும் டிக்கெட்டின் விலை தற்போது ரூ.15,000, ரூ.21,000 வரை உயர்ந்துள்ளது. அதாவது வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக சென்னை – மதுரை இடையே விமான டிக்கெட் கட்டணம் 5 மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னை – கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,315 இன்று ரூ.14,689
சென்னை – சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,290 இன்று ரூ.11,329
சென்னை – தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.3,624 இன்று ரூ.13,639
சென்னை – மதுரை வழக்கமான கட்டணம் ரூ.3,367 இன்று ரூ.17,262
சென்னை – திருச்சி வழக்கமான கட்டணம்- ரூ.2,264 இன்று ரூ.11,369.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *