நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காலண்டர் மாற்றப்பட்ட பிறகும் எதிர்ப்பு தொடர்கிறது. இதனிடையே, நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், ”’ஜெய் பீம்’ திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததற்காக 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர வேண்டும்; 7 நாட்களில் ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்; அக்னி குண்ட காட்சிகளை நீக்க வேண்டும்” வன்னியர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு நோட்டீஸ் அனுப்பினார். தவறினால் கிரிமினல் அவதூறு வழக்கு மற்றும் இழப்பீடு கோரி உரிமையியல் வழக்குகள் தொடரப்படும் என நோட்டீசில் எச்சரிகை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை தியாகராய நகர் ஆற்காடு தெருவில் வசித்து வரும் நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.