மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள சுப்ரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட அண்மைக்காலமாக சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென காவல் ஆய்வாளர் சோஃபியா வெளியிட்டுள்ள ஆடியோ அறிவிப்பில் பல்வேறு பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் தொடர் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் குற்றவாளிகள் அதிவேக பைக்குகளில் ஹெல்மெட் அணிந்து, வாகன எண் பலகை இல்லாமல் செயல்படுவதால் அவர்களை அடையாளம் காண சிரமம் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தங்கத்தின் விலை தற்போது ஒரு சவரன் ₹1,25,000 வரை உயர்ந்துள்ளதை ஆய்வாளர் சோஃபியா சுட்டிக்காட்டியுள்ளார். தங்கத்தின் உயர்ந்த மதிப்பை கருத்தில் கொண்டு, திருடர்கள் திட்டமிட்டு நகை அணிந்து செல்லும் நபர்களைக் கண்காணித்து குற்றங்களில் ஈடுபடுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். தேவையின்றி வெளியே செல்லும் போது தங்க நகைகள் அணிவதைத் தவிர்த்து, அவற்றை வங்கி அல்லது வீட்டு லாக்கரில் பாதுகாப்பாக வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செல்லும் போதும், வீட்டு வாசலில் கோலம் போடும் போதும் நகைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தங்க நகைகளுக்கு மாற்றாக எளிய கில்ட் அல்லது பாசி மாலைகளைப் பயன்படுத்தலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
வணிகர்கள் இரவு நேரங்களில் கடைகளில் பணத்தை வைத்திருக்காமல் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், குற்றச்சம்பவங்கள் நடந்த பகுதிகளில் சில CCTV கேமராக்கள் செயல்படாதது கண்டறியப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கேமராக்கள் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேமரா பார்வையை மறைக்கும் மரக்கிளைகள், பேனர்கள் மற்றும் போஸ்டர்களை அகற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அப்பார்ட்மெண்ட்கள் மற்றும் குடியிருப்புகளில் வாட்ச்மேன் வசதி இருப்பின், அவர்களுக்கு விசில் வழங்கி, நேரம் தவறாமல் கண்காணிப்பு மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யுமாறும் கூறப்பட்டுள்ளது.
வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் பொதுமக்கள் அதுகுறித்து காவல் நிலையத்திற்கோ அல்லது பகுதி வாட்ஸ்அப் குழுக்களிலோ தகவல் தெரிவிக்கலாம். தற்போது 19 வீடுகள் போலீஸ் கண்காணிப்பில் உள்ளதாகவும், தகவல் அளிக்கும் வீடுகளும் ரோந்து பணியின் போது கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் அல்லது மதுவின் தாக்கத்தில் உள்ள சிலர் செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் சாலைகளில் செல்லும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறை எப்போதும் பொதுமக்களின் நண்பனாகச் செயல்படும் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது சம்பவங்கள் குறித்த தகவல்களை உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்குமாறும் காவல் ஆய்வாளர் சோஃபியா கேட்டுக் கொண்டுள்ளார். காவல் ஆய்வாளர் சோஃபியா விழிப்புணர்வு ஆடியோ தற்போது இணையத்தில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது.










