தமிழகத்தில் பிளஸ் டூ எனப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு மையங்களில் கொரோனாவிதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு வெற்றிகரமாக பொதுத் தேர்வை நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர், பிளஸ் டூ பொதுத் தேர்வுகளை எழுதுகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதும் 3,119 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்த நிலையில், நேற்றிரவு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், பிளஸ் டூ தேர்வு மையங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.அதன்படி பிளஸ்டூ பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே ஆறடி இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும், கிருமிநாசினி கொண்டு தேர்வறைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் அவசியம், தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளுதல் கட்டாயம் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தேர்வு மையங்களில் முழுமையாக கடை பிடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக பொதுத் தேர்வு நடைபெறும் மையங்களில், மாணவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்தது.
பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால், தேர்வு எழுத நிரந்தர தடைவிதிக்கப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரித்துள்ளது.
இதனிடையே முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியில் கட்சி தலைவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துதெரிவித்துள்ளனர்.
பிளஸ்-2 தேர்வு இன்று தொடக்கம்- கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவு
