• Sun. Mar 26th, 2023

திருமலை மலைப்பாதையில் 10அடி நீள மலைப்பாம்பு…

Byகாயத்ரி

May 4, 2022

உலக பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான திருமலை திருப்பதிக்கு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பேருந்து, வேன், கார் போன்ற வாகனங்கள் அலிபிரியில் இருந்து மலைப்பாதை வழியாக திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் திருமலைக்கு செல்லும் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதி என்பதால் யானை, சிறுத்தை, மான், பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி மலைப்பாதைக்கு வருவது வழக்கம்.
சில மாதங்களுக்கு முன் பைக்கில் திருமலைக்கு மலை பாதையில் சென்று கொண்டிருந்த தேவஸ்தான பணியாளர்கள் மீது சிறுத்தை ஒன்று திடீரென பாய்ந்து தாக்கியது. யானைகளும் அவ்வபோது மலை பாதைக்கு வருவதால் அவ்வபோது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில், நேற்றிரவு திருமலையிலிருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது வாகனங்களில் திருப்பதிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கீழ் திருப்பதிக்கு ஏழாவது மைல் கல்லில் மலைப் பாதையில் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று சாலையின் குறுக்கே மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இதனால் மலைப்பாதையில் சில கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. மலை பாம்பு வனப்பகுதிக்குள் சென்ற பின் வாகனங்கள் திருப்பதி நோக்கி சென்றன. இதனால் அலிபிரியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *