தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர் ஆசிரியரை கத்தியால் குத்த முயற்சி செய்தார்.
தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேவதானப்பட்டி, டி.வாடிப்பட்டி, மஞ்சளாறு, சாத்தாகோவில்பட்டி, செங்குளத்துப்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 900 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் பிளஸ் 1 மாணவர் ஒருவரை ஆசிரியர் கடந்த 17-ம் தேதி கண்டித்தார். இதனால் கோபமடைந்த மாணவர் வீட்டுக்குச் சென்று கத்தியுடன் வந்து பள்ளி வளாகத்தில் தகராறு செய்தார். அப்போது அந்த மாணவர், கத்தியால் குத்துவேன் என்று மிரட்டியதுடன் போலீஸால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று ஆவேசமாகப் பேசினார்.
இதை ஆசிரியர்கள் மொபைல் போனில் பதிவு செய்தனர். பின்னர் ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்குச் சென்று வீடியோவை காண்பித்து புகார் செய்தனர். இந்நிலையில் மாணவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கரோனா விடுமுறையில்..
இது குறித்து தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம் இன்று (மார்ச் 20) நடைபெற உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட மாணவர், பெற்றோரிடம் விளக்கம் கேட்கப்படும். இக்கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் வளர்மதி, காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்றார்.
கொரோனா விடுமுறையில் பல மாணவர்களின் செயல்பாடுகள் மோசமாகி விட்டது. கற்பிப்புப் பணியில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.