• Fri. Apr 19th, 2024

3,000 கி.மீ பாதயாத்திரைக்கு தயாராகும் பிகே

‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் பாத யாத்திரை தொடங்கவிருப்பதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். பீகாரின் சம்பாரனில் இருந்து 3,000 கி.மீ பாதயாத்திரையை அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கவிருப்பதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் பாத யாத்திரை நடத்துவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து அக்கட்சித் தலைமையுடன் ஆலோசனை நடத்தி வந்தார். 2024 மக்களவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசனை வழங்கினார். இதற்காக பிரசாந்த் கிஷோர் பல முறை சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். ஆனால், அவரது நிபந்தனைகளுக்கு காங்கிரஸில் சில மூத்த தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், காங்கிரஸில் இணையப்போவதில்லை என அறிவித்தார்.

இதையடுத்து ட்விட்டரில் பதிவிட்ட பிரசாந்த் கிஷோர், “உண்மையான மாஸ்டர்களான மக்களிடம் செல்ல வேண்டிய நேரம் இது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்கள் பிரச்சினைகளையும், மக்களின் நல்லாட்சிக்கான பாதையையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது” எனப் பதிவிட்டார். இதனால், பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சித் தொடங்குவதாக பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் இருந்து தனது பயணத்தைத் தொடங்குவதாக இன்னொரு ட்வீட்டையும் பி.கே பதிவிட்டதால் அங்கு கட்சி தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இன்று பீகாரில் செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், “‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் பாதயாத்திரை தொடங்க இருக்கிறேன். அக்டோபர் 2ஆம் தேதி 3,000 கிமீ தூர பாத பீகாரின் சம்பாரனில் இருந்து தொடங்குறேன். அடுத்த மூன்று-நான்கு ஆண்டுகளுக்கு நான் மக்களை நேரடியாகச் சென்று சந்திப்பேன்.” என அதிரடியாக அறிவித்துள்ளார்.

“எனக்கு இப்போது கட்சியோ, மேடையோ இல்லை. பீகாருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் மட்டுமே என்னிடம் உள்ளது.பீகாரில் தற்போதோ, சமீபமாகவோ எந்த தேர்தலும் வரப்போவதில்லை. அரசியல் கட்சி தொடங்குவது இப்போதைக்கு எனது திட்டத்தில் இல்லை.” என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி இப்போதைக்கு இல்லை எனத் தெரிவித்திருந்தாலும், அவரது பாத யாத்திரை, மக்கள் சந்திப்பு ஆகியவை அரசியல் கட்சி தொடங்க அச்சாரம் போடுவதாக அமைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed