உக்ரைன்-ரஷ்யா போர் தலைதூக்கியுள்ள நிலையில் ரஷ்ய அதிபரான விலாடிமிர் புதினின் ரகசிய காதலியை நாடுகடத்த மனு அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதினுக்கு சட்டப்பூர்வமாக லுட்மிலா அலெக்ஸான்ரோனா ஓசேரெட்னயா என்ற மனைவியும், மரியா புதினா, கேத்ரினா டிக்கோனோவா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், 69 வயதான ரஷ்ய அதிபர் புதினுக்கு 38 வயதில் ஒரு ரகசிய காதலியுள்ளார் என பல வருடங்களாக பேசப்பட்டு வருகிறது. அந்த ரகசிய காதலியாக கருதப்படுபவரின் பெயர் அலினா கபேவா. உஸ்பெகிஸ்தான் நாட்டில் பிறந்த இவர் இஸ்லாமிய பெண்ணாக வளர்ந்துள்ளார். ஆனால் தற்போது கிறுஸ்துவத்தை பின்பற்றுகிறார் என கூறப்படுகிறது.
முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆன அலினா கபேவா இதுவரை 2 ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள், 14 உலக சாம்பியன்ஷிப் மெடல்கள், 25 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மெடல்கள் என பல பதக்கங்களை வென்றுள்ளார். இவர் 2006ல் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் இருந்து விலகிக்கொண்டு புதினின் கட்சியில் எம்.பி.யாக பணியாற்றி வந்தார்.
2008ல் முதல் முறையாக இவர்கள் இருவரின் காதல் கதை வெளியில் தெரிய வந்தது. பின்னர் ரஷ்ய ஊடகங்களுக்கு இதை பற்றி பேச தடை விதிக்கப்பட்டது. தனது 4 குழந்தைகளுடன் அலினா கபேவா சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஒரு சொகுசு மாளிகையில் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள சூழலில் பாதுகாப்பு காரணங்களுக்காக அலினா தனது குழந்தைகளுடன் மார்ச் மாத தொடக்கத்திலேயே வெளிநாட்டிலுள்ள பண்ணை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன. இந்தநிலையில் புதினை எதிர்ப்பவர்கள், அவரது ரகசிய காதலியை நாடு கடத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை மனுவை சுவிட்சர்லாந்து அரசிடம் சமர்பித்துள்ளனர்.
அந்த மனுவில், ஹிட்லரையும், அவரது காதலி ஈவாவையும் புதினுடனும் அவரது காதலியுடனும் ஒப்பிட்டு, இருவரும் ஒன்று சேர வேண்டிய தருணம் இது என்றும் குறிப்பிடபட்டுள்ளது. ‘சேஞ்ச்.ஆர்க்’ என்ற வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட இந்த மனுவில் இதுவரை 61,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்து அரசு புதினின் காதலியை நாடு கடத்துவதன் மூலம் சொந்த நாடான ரஷ்யாவுக்கு அலினாவும் அவரது குழந்தைகளும் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.