• Sun. Sep 8th, 2024

ஜெர்மனியில் டெஸ்லா தொழிற்சாலை திறப்பு

ஐரோப்பாவில் முதல் முறையாக ஜெர்மனி நாட்டில் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலை துவங்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது உற்பத்தி தான்.
சந்தையில் டெஸ்லா கார்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருந்தாலும், போதிய கார்களை உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால் டெஸ்லா நிறுவனம் தவித்து வந்தது.

இதனிடையே, டெஸ்லா தனது உற்பத்தியை அதிகரிக்கச் சீனாவில் ஜிகாபேக்ட்ரியை உருவாக்கியது. அதைத்தொடர்ந்து, தற்போது ஆட்டோமொபைல் துறைக்குப் பெயர்போன ஐரோப்பாவில் முதல் தொழிற்சாலையை ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின்-க்கு அருகில் துவங்கியுள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய சந்தையில் டெஸ்லா வலுவாக கால்பதித்துள்ளது.

உலகம் முழுவதும் டெஸ்லா தயாரிப்புக்கு பிரத்யேக வரவேற்பு உண்டு. குறிப்பாக இந்தியாவில் கூட டெஸ்லா வாகன உற்பத்தி தொழிற்சாலையை தொடங்குவது குறித்த பேச்சுகள் அவ்வப்போது எழுவதுண்டு.தமிழ்நாட்டில் கூட டெஸ்லா உற்பத்தி நிறுவனத்தை கொண்டு வர சொல்லி தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழலில் ஜெர்மனி நாட்டில் டெஸ்லாவின் தொழிற்சாலை திறப்பு விழா நடைபெற்றுள்ளது.அந்த நாட்டின் Gruenheide உற்பத்திக் கூடத்தில் தயாரான கார்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ளார் எலான் மஸ்க். அப்போது அங்கு இசை ஒலிக்கப்பட்டுள்ளது. அதை கேட்டு குஷியில் குத்தாட்டம் போட்டுள்ளார் மஸ்க். இந்த விழாவில் ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸகால்சும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலைக்கு இந்நாள் மிகவும் சிறப்பான நாள் என தெரிவித்துள்ளார் மஸ்க். ஜெர்மனியில் தொழிற்சாலை தொடங்குவதாக அறிவித்த இரண்டே ஆண்டுகளில் அதனை நிறுவி, வாகனத்தை உற்பத்தி செய்து அசத்தியுள்ளது டெஸ்லா. 30 வாடிக்கையாளர்களுக்கு டெஸ்லாவின் மாடல் Y கார்களை அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் முன்னிலையில் இந்நிகழ்வில் வழங்கியுள்ளார்.

ஐரோப்பிய நாட்டின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளதால், ஐரோப்பிய சந்தையில் டெஸ்லாவுக்கும் அந்நிறுவனங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *