கல்குவாரி கிரசர் லாரிகளில் கனிமங்களை எடுத்துச் செல்லும்போது ஜிஎஸ்டி பில்லுடன், கட்டாயம் கட்டணமில்லா நடை சீட்டு வழங்க வேண்டும், அரசு மணல் குவாரிகளை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேனத்தின் தலைவர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல ராஜாமணி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் சென்று மனு அளித்தார்.

அந்த மனுவில், தமிழக முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரிகளை இயக்கிட வேண்டும், சாலை விபத்துகளை தவிர்த்து விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிட அதிக பாரம் எடுத்துச் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்குவாரி கிரசர்களில் லாரிகளில் கனிமங்களை ஏற்றி விடுகின்ற போது ஜிஎஸ்டி பில்லுடன், கட்டாயம் கட்டணமில்லா நடை சீட்டு கொடுக்க வலியுறுத்தியும், நடை சீட்டு கொடுக்க மறுக்கும் கல்குவாரி கிரசர் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து கல்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23ஆம் தேதி முதல் லாரிகளை இயக்காமல் நிறுத்தி வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட அறிவித்திருந்தோம்.
அதன் காரணமாக கனிம வளத்துறை அமைச்சர் கடந்த 20ஆம் தேதி அன்று பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையை அடுத்து 25ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்றுக் கொண்டோம். மேலும், பல மாவட்டங்களில் ஜிஎஸ்டி பில்லுடன், நடை சீட்டு இல்லாமல் செல்லும் எங்கள் சங்க லாரிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், எந்தவித ஆவணங்கள் இல்லாமல் செல்லும் கல்குவாரி கிரசர் உரிமையாளர்களின் லாரிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில்லை.

மேலும், கரூர் மாவட்டத்தில் 72 கிரசர்களுக்கு மட்டுமே துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அனுமதி பெறாமல் 100-க்கும் மேற்பட்ட கிரசர்கள் முறைகேடாக செயல்பட்டு தரமற்ற எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, அனுமதி பெறாமல் முறைகேடாக இயங்குகின்ற குவாரி கிரசர்களை கண்டறிந்து அளவுக்கு அதிகமாக கனிமங்களை வெட்டி எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வரும் கிரசர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.