கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.
மகர விளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடைபெறும் நிலையில் இதற்காக கடந்த 30-ந் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர்.மகர விளக்கு விழா நாட்களில் தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தேவசம் போர்டு அனுமதி வழங்கி உள்ளது. கோவிலுக்கு செல்ல கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் எருமேலி பெருவழிப்பாதையும் திறந்து விடப்பட்டு உள்ளது.
பெருவழிப்பாதையில் பக்தர்கள் சுமார் 35 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். எனவே அவர்களுக்கு வசதியாக வழியில் ஓய்வெடுக்கும் கூடாரங்களும், தற்காலிக மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
பெருவழிப்பாதை வழியாக செல்லும் பக்தர்கள் 18-ம் படி ஏறி அய்யப்பனை தரிசனம் செய்து திரும்புகிறார்கள். சபரிமலை சன்னிதானம் தினமும் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.இப்போது பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் கோவில் நடை அடைக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கோவில் நடை அடைக்கும் நேரத்தை இரவு 11 மணி வரை நீட்டிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதன்படி இன்று கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இரவு 11 மணி வரை சன்னிதானம் சென்று அய்யப்பனை தரிசனம் செய்யலாம்.