• Thu. Mar 28th, 2024

மழை விட்டும் மழைநீர் வடியாததால் மக்கள் அவதி..

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், வேதாளை பகுதிகளில் மழை விட்டும் தேங்கிய மழைநீர் வடியாததால் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு.


ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், வேதாளை, இடையர்வலசை, மண்டபம்முகாம், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளையும் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் மண்டபம்முகாம்அருகே உள்ள அரசு ஹெலிகாப்டர் இறங்குதளம் முற்றிலும் மழைநீரில் மூழ்கியுள்ளது. அதனருகே உள்ள கோவில் , சமையல் எரிவாயு விநியோக நிலையம், அரசு பிற்பட்டோர் மாணவர்விடுதி, இடையர்வலசையிலுள்ள வனச்சரக அலுவலகம், அரசினர் கால்நடை மருத்துவமனை ஆகியவையும் மழைநீர் சூழ்ந்து தனித்தீவுபோல காட்சியளிக்கிறது.


இந்தநிலையில் நேற்று முதல் மழை நின்றுள்ளபோதும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.அரசு துரிதநடவடிக்கை எடுத்து உடனடியாக தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தூள்ளனர்.


இதுகுறித்து இடையர்வலசையைச் சேர்ந்த பஞ்சவர்ணம் கூறுகையில்: மழைநீர் சூழ்ந்து வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளதால் வீடுகளைவிட்டு வெளியேற முடியவில்லை, உணவு சாமைக்கமுடியவில்லை, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை, வேலைக்கு செல்ல முடியவில்லை, உடனடியாக இந்த மழை நீரை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.


இதுகுறித்து மண்டபத்தைச் சேர்ந்த ஞானகுரு கூறுகையில்:கடந்த 10 நாட்களாக மண்டபம், வேதாளை பகுதிகளில் பெய்த மழையில் தாழ்வான இடங்கள் அனைத்திலும் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள், மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மழை நீரை அரசு உடனடியாக அகற்றுவதுடன் இனி இது போன்று மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை நிரந்தரதீர்வுகாண எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *