• Tue. Apr 30th, 2024

கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி

Byவிஷா

Apr 17, 2024

ஊடகங்களில் கருத்து கணிப்பு என்ற பெயரில் வருவது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:
திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்புகளில் இதுவரை 7 சதவீத அறிவிப்புகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. 2014 இல் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போது பெட்ரோல் டீசல் விலை குறைந்திருந்தது. தற்போது 2024 ஆம் ஆண்டு பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இன்னும் விலை குறைக்காமல் அதிகமான வரி போட்டு மக்கள் மீது பெரிய சுமையை சுமத்தியுள்ளனர்.
இதனை மத்திய அரசு வன்மையாக கண்டிப்பதோடு, மாநில அரசு பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என அறிவித்தும் இதுவரை குறைக்கப்படவில்லை. இதனால் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவில் அனையிலிருந்து ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். ஆனால், இந்த ஆண்டு திமுக அரசு சரியான முறையில் அணுகாததால் உச்சநீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை இதனால் டெல்டா பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
சில ஊடங்கங்கள் பொய்யான கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றது. அது கருத்து கணிப்பு இல்லை கருத்து திணிப்பு. தேர்தல் பத்திரங்கள் வெளியிடுகிறது அதில் பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் அதிகமான நிதி பெற்றிருக்கிறது. திமுக 650 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் கடன் பெற்று இருக்கிறது. பிரதமர் அடிக்கடி தமிழகம் வந்து செல்வதால் எந்த பயனும் இல்லை. மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வரும்போது ஏதாவது ஒரு திட்டத்தை துவக்கி வைத்து சென்றிருந்தால் ஏதாவது பயன் கிடைத்திருக்கும்.
அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். அதிமுக ஆட்சியில் தான் பல்வேறு துறைகள் வளர்ச்சி பெற்றது. பல்வேறு திட்டங்கள் இல்லங்கள் தோறும் சென்றடைந்து இருக்கிறது. மக்களுக்கான சேவையை அதிமுக அளித்து வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். மக்கள் எதிர்பார்க்கிற வெற்றி கிடைக்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பையே மதிப்பதில்லை. மாநில உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்றால் தமிழகம் பாதிக்கப்படும் நேரத்தில் பாதுகாக்க வேண்டும் என்றால் நாம் சுதந்திரமாக நின்று, நாடாளுமன்றத்தில் பேசி தேவையான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் இதுவே ஒரு வழி. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *