• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 8, 2025

சிக்கலை மேலும் சிக்கலாக்கி விடாத தெளிவு வேண்டும். அதை நம் மனம்தான் செய்தாக வேண்டும். ஒரு சிக்கலை விரைவாகத் தீர்த்து விட வேண்டுமென உணர்ச்சி வயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகத்தான் செய்யும்.

எங்கு அவன் ஒரு சிக்கலை முடித்ததாக எண்ணுகிறானோ அங்கேயே அதன் வேரிலேயே மற்றொரு சிக்கல் முளைத்து விடும். சிலருக்கு சில சமயம் ஏற்படுகின்ற எதிர்பாராத நிகழ்ச்சிகளைக் கண்டு அதனால் ஏதேதோ விளையும் எனக் கற்பனை செய்து கொண்டு வருந்திக் கவலை கொள்வார்கள்

கவலை வேறு பொறுப்புணர்ச்சி வேறு. கவலைப்படக் கூடாது என்பதற்காக வந்துவிட்ட சிக்கலை மறந்துவிடலாகாது. சிக்கலை ஏற்கத்தான் வேண்டும். எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆராயவும் வேண்டும் சிக்கல்களை அவற்றின் நுட்பந்தெரிந்து அவிழ்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

எந்த நிகழ்ச்சியானாலும் என்ன முடிந்த வரை ஏற்றுக் கடனாற்றுவோம். பிறந்துவிட்டோம் ஆனால் இப்படித்தான் வாழவேண்டுமெனத் தெரிந்து வாழ வேண்டும்; தைரியமாக வாழ வேண்டும். சிக்கல்கள் வெள்ளம்போல் வந்தாலும் அறிவெனும் தோணியில் ஏறி அவ்வெள்ளத்தில் மிதக்க வேண்டும். மூழ்கிவிடக்கூடாது.

தகுந்த மனோ பயிற்சியின் மூலம் மனதின் தரத்தையும் மனதின் திறத்தையும் அதாவது மனதின் வளத்தை முதலில் உயர்த்திக் கொண்டாக வேண்டும். தன்நிலை அறிந்து இறைநிலை உணர்ந்து அந்தத் தெளிவோடு ஒழுக்கம் கடமை ஈகை என்னும் அறநெறி காத்து வாழும் ஒரு தேர்ந்த மனவளக்கலைஞனுக்கு எவ்விதத்தும் கவலை வர வாய்ப்பே இல்லை. அத்தகைய அறிவுடைமையை நாம் பெற்றாக வேண்டும்.”

தப்புக் கணக்கு:
“தப்புக் கணக்கிட்டுத் தான் ஒன்றை எதிர்பார்த்தால்
ஒப்புமோ இயற்கை விதி; ஒழுங்கமைப்பிற்கொத்தபடி
அப்போதைக் கப்போது அளிக்கும் சரிவிளைவு
எப்போதும் கவலையுற்று இடர்ப்படுவார் இதை யுணரார்.

“சிக்கல்களை சந்திக்க போதிய பலமில்லாத
மனநிலையைக் கவலை என்கிறோம்.”

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.