

உடலும் மனசும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பது தான் வாழ்க்கை!
இந்த இரண்டும் போராட்டத்தோடு இருப்பதற்கு பெயர் வாழ்க்கை அல்ல.

இந்த இரண்டையும் போராட வைத்துக் கொண்டு சம்பாதிப்பது உடல் நலத்தையும் தன் மனநலத்தையும் கெடுப்பதற்காகத்தான் இருக்கிறது
உடல் நலத்தையும் மனநலத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றால்
வேலை வெட்டி இல்லாமல் இந்த இரண்டையும் உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை!
நீ எவ்வளவு சம்பாதித்தாலும் இந்த உடலை பாதுகாப்பாகவும் இந்த மனதை பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள முடியாத அந்தப் பணம் என்ன செய்யப் போகுது.
அது எதிர்கால சந்ததிகளுக்கு உதவும் என்று நீ சொல்வது காதில் விழுகாமல் இல்லை.
எதிர்கால சந்ததிகள் என்பதும் மனிதர்கள் தானே
அவங்களுக்கும் உடலும் மனமும் இருக்கத்தானே செய்யும்!
பணம் பொதுவான ஒரு பொருள். அந்தப் பணத்தை யார் வேண்டுமானாலும் நீயும் நானும் கூட செலவு செய்யலாம் பயன்படுத்தலாம். இந்த உடலும் மனமும் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறு வேறான நிலையில் இருக்கக்கூடியது.
வேறு வேறு சிந்தனையில் இயங்கக்கூடியது. எத்தனை மனிதர்கள் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தாலும் எல்லோருக்குமே உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்
உடலும் மனமும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பதாக வெளி உலகத்திற்கு காட்டிக் கொண்டு இருந்தால் வெளி உலகத்திற்கு எந்த நஷ்டமும் இல்லை.
உன்னை நீயே ஏமாற்றிக் கொள்வதற்கு அது உனக்கு வேண்டுமானால் வசதியாக இருக்கும்
வாழ்க்கை என்பது துவண்டு போய்
கசந்து போய் வாழ்வதற்கு அல்ல!
மனதையும் உடலையும் எவ்வாறெல்லாம் நன்றாக வைத்துக் கொள்ள முடியுமோ அவ்வாறு நன்றாக வைத்துக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
இந்த உடலையும் இந்த மனதையும் எவையெல்லாம் சீர்கெடுக்கின்றதோ அவற்றிலிருந்து விலகி நிற்க வேண்டும்.
தவறான பாதையில் உலகம் போய்க்கொண்டிருக்கிறது என்பது உனக்குத் தெரிந்த பிறகும்.
அதுதான் நாகரிகம் அதுதான் கௌரவம் அதுதான் புகழ் என்று உன் உடல் நலத்தையும் மனநலத்தையும் கெடுத்துக் கொண்டு வாழ்வதற்கு பெயர் நாகரீகம் என்று சொல்ல முடியாது.
எந்த யுகத்தில் மனிதன் வாழ்ந்தாலும் உடலும் மனமும் நன்றாக இருந்தால் தான் மனிதனாக பிறந்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கும்!
உடலுக்கு ஒத்துப் போகக்கூடிய உணவுகள் மனம் ஒத்துழைக்கும் செயல்கள் இவை இரண்டையும் ஒழுங்காக நாம் பார்த்துக் கொண்டால், நோயற்ற வாழ்வோடும் நிறைவான மனதோடும் ஏன் வாழ முடியாது?

