• Tue. Apr 30th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Sep 16, 2023

சிந்தனைத்துளிகள்

ஒருத்தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்கு என்ன வழி என்று நாலு பேரிடம் யோசனை கேட்டான்.

பணம் இருந்தால் மகிழ்ச்சி தானாக வரும். அதனால் பணம் சம்பாதிக்கின்ற வழியைப் பார். அதன் பிறகு நீ தேடிக் கொண்டிருக்கின்ற மகிழ்ச்சி உன்னைத் தேடிக் கொண்டு வரும் என்று சொன்னார்கள்.

அப்படி என்றால் மகிழ்ச்சி இருக்கிற இடம் பணம்தான் என்று அவன் முடிவு செய்தான். அதை சேர்க்க ஆரம்பித்தான். கொஞ்ச நாளில் பெரிய ஆள் ஆகிவிட்டான். செல்வம் நிறைய சேர்ந்துவிட்டது.

இப்போதும் அவனுக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. மறுபடியும் நண்பர்களிடம் யோசனை கேட்டான்.

பணம் சேர்த்தால் மட்டும் இன்பம் வந்து விடாது. அது செலவு செய். பணம் மூலமாக இன்பத்தை தேடு கிடைக்கும் என்றார்கள். உடனே அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளிநாடுகள் எல்லாம் சுற்றி பார்த்தான். அப்புறம் விருப்பமானதை எல்லாம் வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தான். மது, போதை பழக்கம் இப்படி எல்லாவற்றிலும் ஈடுபட்டு பார்த்தான்.

கடைசியாக ஒரு பெரியவரிடம் யோசனை கேட்டான். அவர் சொன்னார் இல்லறத்தில் உனக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. துறவறத்திலாவது கிடைக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.
சரி அதையும் முயற்சி பண்ணிப் பார்ப்போம் என்று முடிவு செய்தான்.

துறவறம் என்றால் சும்மாவா? எல்லாத்தையும் துறக்க வேண்டும். எதற்கும் துணிந்து விட்டான். வீட்டில் இருந்த நகை, பணம், வைரம் , வைடூரியம் எல்லாவற்றையும் மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டு ஒரு யோகியை தேடிப் போனான். அவர் காலடியில் கொண்டு போட்டான்.

அவர் நிமிர்ந்து பார்த்தார் என்ன இதெல்லாம் என்றார்.

இதெல்லாம் இனி எனக்குத் தேவையில்லை என்றான் அவன்.

சரி அப்படி என்றால் உனக்கு என்ன தேவை?

எனக்கு மகிழ்ச்சி தேவை.
மன அமைதி தேவை என்றான் அவன்.

அந்த யோகி தன் காலடியில் இருந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்தார். உள்ளே தங்கம் , வைரம், நகை, பணம் அவ்வளவுதான் அவசரமாக அதை சுற்றி எடுத்துக்கொண்டார். தலையிலே வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தார்.

இவனுக்கு அதிர்ச்சி இவர் போலி சாமியார் போல இருக்கே!
ஏமாந்து விட்டோமே என்று நினைத்தான். வருத்தப்பட்டான். துக்கம் ஆத்திரமாக மாறியது. உடனே அந்த யோகியை துரத்த ஆரம்பித்தான்.

அவர் சந்து பொந்தெல்லாம் நுழைந்து ஓடினார். அவனும் விடாமல் துரத்தினான். கடைசியாக அந்த யோகி மூச்சு இரைக்க இரைக்க ஒரு இடத்திலே வந்து நின்றார். அது அவர் புறப்பட்ட இடம். எங்கிருந்து ஓட ஆரம்பித்தாரோ அங்கேயே வந்து நின்றார். துரத்தி வந்தவனும் ஓடி வந்து நின்றான்.

அந்த யோகி சொன்னார் என்ன பயந்து விட்டாயா? இதோ உன்னுடைய செல்வம். நீயே வைத்துக்கொள். உன்னுடைய மூட்டையை திரும்பப் பெற்றுக்கொள் என்று கொடுத்தார். கைவிட்டுப்போன தங்கமும் வைரமும் பணமும் திரும்பக் கிடைத்து விட்டதால் அவனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.

இப்போது மறுபடியும் அந்த யோகி சொல்கிறார். இங்கே நீ வருவதற்கு முன்னால் கூட இந்த தங்கமும் வைரமும் உன்னிடம் தான் இருந்தது. ஆனால் அப்போது உனக்கு மகிழ்ச்சி இல்லை. இப்போது உன்னிடம் இருக்கிறதும் அதே தங்கமும் வைரமும்தான். ஆனால் உன் மனதில் மகிழ்ச்சி இருக்கிறது.

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை. அது உள்ளே இருக்கிறது. அது நம் மனதில் இருக்கிறது. இதை நன்றாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தங்கத்தையும் வைரத்தையும் மூட்டை கட்டி தலையிலே வைத்துக் கொண்டு அலைந்த அவன் மாதிரியே நம்மில் பல பேருக்கு மகிழ்ச்சி எங்கே இருக்கிறது என்ற உண்மை புரியவில்லை. அதனால் தான் பல சமயங்களில் நாம் மகிழ்ச்சியாக இருக்க அடுத்தவர்களை சார்ந்து இருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *