• Mon. Jan 20th, 2025

மறைசாட்சி தேவசகாயம் மவுண்ட் சாலையில் மேம்பாலம்

மறைசாட்சி தேவசகாயம் மவுண்ட் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.
சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

இந்தியாவின் முதல் மறைசாட்சியாய் உயிர்நீத்த புனிதர். தேவசகாயம் பிள்ளை திருத்தலம் ஆரல்வாய்மொழியில் உள்ளது. இங்கு செல்ல நாகர்கோவில்-திருநெல்வேலி மாநில நெடுஞ்சாலையில் தோவாளை அடுத்த முத்துநகர் பகுதியில் இருந்து மங்கம்மாள் சாலை வழியாக செல்லும் பாதையே பிரதான சாலையாகும்.

இச்சாலை வழியாகவே இங்குள்ள திருத்தலத்திற்கு செல்லும் யாத்ரீகர்கள், இங்குள்ள கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள், கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர், செங்கல்சூளைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் சென்று வருகின்றனர்.

இச்சாலையின் குறுக்கே நாகர்கோவில் – காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலை (NH-944) செல்கிறது. குறிப்பிட்ட பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படாததால் நான்குவழிச் சாலையினை கடந்து தான் வாகனங்கள் மற்றும் கிராம மக்கள், யாத்ரீகர்கள் செல்ல வேண்டி உள்ளது. குறிப்பிட்ட பகுதி வளைவான பகுதி என்பதால் நான்குவழிச் சாலையில் வரும் வாகனங்கள் சாலையில் கடப்பவர்களுக்கு எளிதில் தெரிவதில்லை.

இதனால் சாலையினை கடக்க முயற்சிக்கும் வாகனங்கள் மற்றும் நபர்கள் விபத்திற்கு உள்ளாகும் பரிதாப நிலை உள்ளது. நான்குவழிச் சாலை அமைக்கப்பட்ட பின் இப்பகுதி துண்டிக்கப்பட்டு தனித்தீவாகிப் போனது. இப்பகுதி மக்கள் குறிப்பிட்ட சாலையினை கடந்தே வெளி இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் மிகுந்த சிரமப்பட்டே குறிப்பிட்ட சாலையினை கடந்து வருகின்றனர்.

எனவே இப்பகுதியின் முக்கியத்துவம் மற்றும் மக்களின் நிலை கருதி இவர்களது பாதிப்புகளை போக்கிடும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் மேம்பாலம் அமைத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.