தமிழகத்தில், ஐந்து மாவட்டங்களில் வரும் 1-ம் தேதி மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சென்னையில் இன்று சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கரூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 16 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நாளையும், நாளை மறுநாளும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
வரும் 1-ம் தேதி பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதற்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும்.கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் சித்தம்பட்டியில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.