• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்

Byவிஷா

Mar 15, 2024

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், ஓபிஎஸ் அணியினர் அதிமுகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு மோதல்கள் உருவானது. குறிப்பாக அதிகார போட்டியின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என 4 அணியாக அதிமுக பிரிந்தது. முன்னதாக ஓ பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து ஆட்சி அதிகாரத்தையும், கட்சியையும் வழிநடத்தினர். இதனையடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை தலைமைக்கு தோல்வியே கிடைத்தது. இதனால் ஒற்றை தலைமை முழக்கம் அதிமுகவில் எதிரொலித்தது. ஒற்றைத் தலைமை என்ற எடப்பாடி பழனிச்சாமியின் முடிவிற்கு ஓ பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதன் காரணமாக அதிமுகவில் பிளவு உருவானது. தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் என தொடர்ந்து சட்ட போராட்டங்கள் நடத்தி வந்தார். ஆனால் நீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வத்திற்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தனி அணியாக தற்போது செயல்பட்டு வருகிறார். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மீண்டும் குடைச்சல் கொடுக்கும் வகையில் நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் முறையிட்டுள்ளார் இதன் காரணமாக மீண்டும் அதிமுக வட்டாரத்தில் ஒரு பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி தனது அணிக்கு இழுக்கும் வேலையை தொடங்கியுள்ளார். அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம் ஜி ஆர் மாளிகையில், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அணியில் உள்ள திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜி சரவணன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். ஓ பன்னீர்செல்வம் பாஜகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து விலகியதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.