• Thu. Mar 28th, 2024

ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் ஒற்றை தலைமை?

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், கே பி முனுசாமி, வைத்திலிங்கம் என அதிமுக முக்கிய தலைவர்கள் புழல் சிறைக்கு சென்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் போது 49 ஆவது வார்டுக்குள்பட்ட தண்டையார்பேட்டையில் ஒரு வாக்குச் சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாக ஒரு தகவல் வெளியானது. இதையடுத்து கள்ளஓட்டு போட்டதாக நரேஷ் என்ற திமுக பிரமுகரை அதிமுகவினர் தாக்கியுள்ளனர். இதை அறிந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அங்கு சென்று அதிமுகவினரை விலக்கிவிட்டு அந்த நபரை மீட்டுள்ளார்.

மேலும் அவரின் சட்டையை கழற்றி ஜெயக்குமாரே அந்த நபரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து வீடியோ ஜெயக்குமாரின் பேஸ்புக் பக்கத்திலும் வெளியானது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட திமுக பிரமுகர் நரேஷ், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தாக்கியதாக 40 பேர் மீது புகார் கொடுத்தார்.

அதன் பேரில் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் வரும் மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் எடப்படாடி பழனிச்சாமி ஜெயக்குமாரை சந்திக்க புழல் சிறைக்கு சென்றார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியும் சென்றிருந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் பெஞ்சமினும் சென்றிருந்தார்.

ஜெயக்குமாரை வீடு புகுந்து கைது செய்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை போய் சந்தித்ததால் புழல் சிறையில் பரபரப்பு எழுந்தது. இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர் செல்வம் இன்று காலை புழல் சிறைக்கு சென்றார்.

அவருடன் வைத்திலிங்கம், கே பி முனுசாமி உள்ளிட்டோரும் உடன் சென்றிருந்தனர். கடந்த 24 ஆம் தேதி அதிமுகவின் இரட்டை தலைமைகளில் ஒருவர் சென்றுவிட்ட நிலையில் இன்று மற்றொரு தலைமையும் சந்தித்துவிட்டார். வரும் 7 ஆம் தேதி ஜெயக்குமார் வழக்கு விசாரணைக்கு வரும் போது அவர் விடுவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுகிறது. மேலும் ஜெயக்குமாரை விடுவிப்பதற்காக அதிமுக சார்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடந்த 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை முடித்து கொண்டு ஓபிஎஸ்ஸிடம் சொல்லாமல் கொள்ளாமல் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்பி வேலுமணியை அழைத்து கொண்டு புழல் சிறையில் உள்ள ஜெயக்குமாரை சந்தித்து பேசியுள்ளார். இது ஓபிஎஸ்ஸுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது தன்னுடன் இருந்து கொண்டு தன்னை அழைத்து செல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி புழலுக்கு போனதை அடுத்து இன்று ஓபிஎஸ் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூட அதிமுகவில் சரியான தலைமை இல்லை என்று அதிருப்தி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருந்த ஒற்றை தலைமை விவகாரம் தற்போது அதிமுகவில் மீண்டும் தலை தூக்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த முறை தேர்தலின் போது முதல்வர் வேட்பாளர் அறிவிப்பின் போது ஓபிஎஸ் தர்ம யுத்தம் 2.0 ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் சரவெடி திடீரென்று புஸ்வாணமாகி போனது.அதுபோல தான் இந்த முறையும் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *