கரும்புக்கான ஆதார விலையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை டன்னுக்கு 4000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றது திமுக. இந்த வாக்குறுதி இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனை அளிக்கும் செயல்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் ஆதார விலையோடு சேர்த்து 2024-2025-ம் ஆண்டிற்கான கரும்பு விலையை டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் என அறிவிக்க வேண்டும். 2025-2026-ம் ஆண்டு கரும்பிற்கான ஆதார விலையை கணிசமாக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் ஆதார விலையை கணிசமாக உயர்த்த வேண்டும். இரண்டையும் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.