சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட முத்து ரங்க பூங்காவில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய இறகுபந்தாட்ட மைதானம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

4-வது மண்டலக் குழுத் தலைவர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, மேயர் வசந்தகுமாரி, 5-வது மண்டலக் குழுத் தலைவர் இந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்தனர். தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் இறகுபந்தாட்டம் விளையாடி மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து பூங்காவை பார்வையிட்ட அவர்கள், உடற்பயிற்சியும் மேற்கொண்டனர். ஆனால், இதே முத்து ரங்க பூங்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட பெரியவர்களுக்கான உடற்பயிற்சி கூடம் தற்போது பராமரிப்பு இன்றி செயல்படாமல் கிடப்பில் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உடற்பயிற்சி கூடத்தில் உள்ள கருவிகள் பயன்பாட்டிற்கு அற்ற நிலையில் உள்ளதுடன், பழைய பொருட்கள், பெயிண்ட் டப்பாக்கள் குவிக்கப்பட்டும், டிரெட்மில் கருவிகளில் உடைகள் காய வைக்கும் கொடிகளாக பயன்படுத்தப்பட்டும் காணப்படுகிறது. இதனால் அந்த உடற்பயிற்சி கூடம் முழுமையாக செயலிழந்த நிலையில் உள்ளது.

இது குறித்து சட்டமன்ற உறுப்பினரிடம் கேள்வி எழுப்பியபோது, அங்கு உள்ள கருவிகள் அனைத்தும் பழுதடைந்துள்ளதாகவும், மாற்று இடம் ஏற்பாடு செய்து புதிய உடற்பயிற்சி கூடம் புதுப்பிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்த இறகுபந்தாட்ட மைதான திறப்பு விழாவில் மாமன்ற உறுப்பினர்கள், தாம்பரம் பகுதி திமுக நிர்வாகிகள், தாம்பரம் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.






