• Wed. Apr 23rd, 2025

ஊட்டி பொதுப்பணித்துறை அமைச்சர் மருத்துவக் கல்லூரியில் ஆய்வு

ByG. Anbalagan

Apr 5, 2025

இந்தியாவிலேயே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தங்கும் விடுதியுடன் கட்டப்பட்ட ஒரே மருத்துவக் கல்லூரி என்ற பெருமையை உதகையில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொது பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 700 படுக்கை வசதிகள் கூடிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நாளை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு..,

இந்தியாவிலேயே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாகவும், தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த அரசு மருத்துவமனை கட்டிடத்தை கட்ட பெரும் சவால்களை சந்தித்ததாகவும், மண் சரிவுகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு அதன் பிறகு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தற்போது செயல்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனை கட்டிடம் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாமல், பிரசவம் மற்றும் அவசரகால சிகிச்சைகளுக்காக செயல்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் பழங்குடியினர்களுக்கான பிரத்தியேக வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது, இதில் பழங்குடியினர் மக்கள் அதிகம் பாதிக்கப்படும் சிக்கில்செல் அனிமியா போன்ற அரிதான நோய்களுக்கு இங்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.