• Sat. Apr 20th, 2024

மழை பாதிப்பு காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. விரைவில் இயக்கப்பட உள்ளதால் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்ததால், மேட்டுப்பாளையம்-குன்னூர் ரெயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது. மேலும் பாறைகள் உருண்டு விழுந்ததில் தண்டவாளம் சேதமடைந்தது. 

குறிப்பாக கடந்த மாதம் 4, 5-ந் தேதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 6-ந் தேதி முதல் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதைதொடர்ந்து மலை ரெயில் பாதையில் விழுந்து கிடந்த மண்ணை அகற்றும் பணி நடைபெற்று வந்தது.

இதற்கிடையே கல்லார்-குன்னூர் இடையே அவ்வப்போது மண் சரிந்து விழுந்தது. இதனால் நாளை வரை மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலை ரெயில் சேவை ரத்து நீட்டிக்கப்பட்டது. 

தற்போது காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடித்து வருகிறது. இதனால் ரெயில் பாதையில் சேதமடைந்த தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு பணிகள் முடிந்து உள்ளன. 

இந்த நிலையில் நேற்று குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு மலை ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. 1½ மாதத்துக்கு பின்னர் மலை ரயில் இயக்கப்பட இருப்பதால் தண்டவாளம் பாதுகாப்பாக உள்ளதா என்று சோதிக்க நீராவி என்ஜினுடன் ஒரு ரெயில் பெட்டி இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கிருஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வர உள்ளனர். இதை கருத்தில் கொண்டு நாளை முதல் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மீண்டும் மலை ரயில் சேவை தொடங்க இருக்கிறது. ஆனால் வழக்கம்போல் ஊட்டி- குன்னூர் இடையே தினமும் 3 முறை மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *