திண்டுக்கல் சாணார்பட்டி அருகே மடூர் ஊராட்சிக்கு உட்பட்ட புகையிலைப் பட்டியில் புனித சந்தியாகப்பர், செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாடு முட்டி ஒருவர் பலியானார்.

ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி திண்டுக்கல்,தேனி,மதுரை,விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 800 காளைகளை மண்டல இணை இயக்குனர் விஷ்ணுகாந்த்,துணை இயக்குனர் சரவணன்,உதவி இயக்குனர்கள் சரவணகுமார், ஜெயராஜ்,முத்துச்சாமி பாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் மருத்துவர் அருள்முருகன் தலைமையிலான 55 பேர் கொண்ட குழுவினர் கால்நடைகளை பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கினர்.மாடுபிடி வீரர்களை வட்டார மருத்துவ அலுவலர் ஜெனி தலைமையில், மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்து காளைகளை அடக்க அனுமதித்தனர்.

இதேபோல் மாடுபிடி வீரர்கள் 400 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.வீரர்கள் உறுதிமொழியுடன் 8.30 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.
ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் திருமலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில் மேற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் விஜயன்,கிழக்கு தாசில்தார் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன்,வி.ஏ.ஓ.கவிதா ஆகியோர் உடன் இருந்தனர்.
முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது.காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர்.சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின.இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
காயம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாட்டின் உரிமையாளர்கள் சட்டக்காரன்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (46), வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த தர்மா (27),மாடுபிடி வீரர்கள் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த விமல் (24),புகையிலைப் பட்டியைச் சேர்ந்த அருண்பாண்டி (25), பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த தோனி (27), பார்வையாளர்கள் குட்டத்து பட்டியை சேர்ந்த சேசுராஜ் (50),பிள்ளமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் (20) ஆகிய 9 பேர் காயமடைந்தனர். இதில் தமிழரசன், பாலகுரு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் அலங்காநல்லூரைச் சேர்ந்த பாலகுரு,24. வாலிபர் பலியானார்.
பாதுகாப்பு பணி திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர்,சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் உள்பட 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும்தங்க காசு,வெள்ளி காசு, அண்டா,குடம், சைக்கிள்,குத்து விளக்கு,வயர் கட்டில், குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.

விதிமுறைகளை கடைபிடிக்காத மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தாலும் தற்போது ஜல்லிக்கட்டு விதிமுறைகள் பல தமிழக அரசன் தளர்த்தப்பட்டதன் காரணமாக பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்து வருகிறது.ஜல்லிக்கட்டு வீரர்கள் பரிசோதனையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி வீரர்களை கலைந்து போக செய்தனர்.மேலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை சுற்றி 5 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் ஏதேனும் திறந்த வெளி கிணறு, தொட்டி, இருப்புப் பாதை ஆகியன இருப்பின் காளைகள் அங்கு செல்ல முடியாதவாறு உரிய தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும்.ஆனால் ஜல்லிக்கட்டு விதிமுறைகளை மீறி மாடுகள் நிற்கும் இடத்தில் கிணறுகள் உரிய தடுப்புகள் இல்லாமல் திறந்தவெளியில் கிணறுகள் இருந்தது.
ஏற்கனவே கடந்த காலங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கிணறுகளில் காளைகள் விழுந்து மீட்கப்பட்ட சம்பவம் மற்றும் உயிரிழந்த சம்பவமும் ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் பார்வையாளர் அமரும் கேலரி உறுதியாக அமைக்கப்பட வேண்டும். பார்வையாளர்கள் அமர்ந்து விழாவினை காணும் வகையில் உறுதித் தன்மையுடன் அமைக்கப்படும் கேலரியில் திடலின் இரு மருங்கிலும் எட்டடி உயரத்திற்கு குறையாமல் இரட்டை தடுப்பான்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு செய்யாமல் கேலரியில் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் கைக்குழந்தைகளுடன் நின்று பார்வையிட்டனர்.இரட்டை தடுப்பான்களும் அமைக்கப்படாமல் இருந்ததால் விபத்து ஏற்படும் சூழ்நிலையும் இருந்தது.
மேலும் வாடிவாசல் வெளியே அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் கேலரியில் மின் கம்பிகள் செல்லும் இடத்தில் பெண்கள் குழந்தைகள் ஆபத்தான முறையில் இன்று ஜல்லிக்கட்டை பார்வையிட்டு ரசித்தனர்.சாமியான பந்தலும் அமைக்கப்படாததால் குழந்தைகள் மயங்கி விழக்கூடிய சூழ்நிலையும் இருந்தது.பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஆபத்தை உணராமல் வீட்டின் முன் பகுதியில் உள்ள சிமெண்ட் ஸ்லாப்பில் நின்று இளைஞர்கள் ஜல்லிக்கட்டு பார்வையிட்டனர்.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் செய்தியாளர்கள் செய்தி எடுப்பதற்கும் எந்த விதமான ஏற்படும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்படவில்லை.










