• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆனைமலையில் யானை தாக்கி ஒருவர் பலி!

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் கோழிகமுத்தி கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு 27 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதில் அசோக் என்ற 12 வயது யானையை கோழிகமுத்தி மலை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்(45) மற்றும் முருகன் ஆகியோர் பராமரித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல யானைக்கு உணவு அளித்து விட்டு மேய்ச்சலுக்காக வனப் பகுதிக்கு அழைத்து சென்றபோது, திடீரென அந்த யானை முருகனை தாக்கியது, அதை பார்த்த ஆறுமுகம் அவரை காப்பாற்ற சென்றபோது அவரையும் தாக்கியது.

இதில் கீழே விழுந்த ஆறுமுகத்தின், மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தகவலின் பேரில், வனத்துறையினர் காயமடைந்த ஆறுமுகத்தை ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் மருத்துவமனையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை போலீசார், உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.