தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்ப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் 63 நாடுகளில் பரவிட்டது.டெல்டா வைரஸைவிட ஒமிக்ரான் வேகமாகப் பரவுகிறது. மேலும் தடுப்பூசி மூலம் கிடைத்த நோய் தடுப்பாற்றலையும் இந்த வைரஸ் குறைக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ம் தேதி கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் அடுத்தடுத்து பல்வேறு நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. இதனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் தென் ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும்பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன சில நாடுகள் தடையும் விதித்துள்ளன.
கொரோனா வைரஸில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திய டெல்டா வைரஸைவிட, ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவுகிறது என்றும், பாதிப்பின் அளவில் லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்றும் முதல் கட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்தது.
அதுமட்டுமல்லாமல் கொரோனாவில் பாதிக்கப்பட்டு அதனால் கிடைத்த நோய் எதிர்ப்புச்சக்தி, தடுப்பூசி மூலம் கிடைத்த நோய் எதிர்ப்புச்சக்தியையும் இந்த ஒமிக்ரான் வைரஸ் குறைத்து விடுகிறது, அல்லது அழித்துவிடுகிறது என்றும் கூறப்பட்டது. ஆனால், அதிகமான புள்ளிவிவரங்கள் ஏதும் கிடைக்காததால் அறிவியல் வல்லுநர்கள் உறுதியான தகவலை ஏதும் கூறவில்லை.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு தன்னுடைய வாராந்திர அறிக்கையைத் நேற்று வெளியிட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமிக்ரான் வைரஸ் டிசம்பர் 9-ம் தேதி நிலவரப்படி உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்களில் 63 நாடுகளுக்குப் பரவிவிட்டது.
டெல்டா வைரஸைவிட வேகமாகப் பரவுவது ஏன் எனத் தெளிவாகத் தெரியவில்லை. தற்போது கிடைத்த முதல்கட்ட தகவலின்படி, சமூகப்பரவல் ஏற்பட்டால் டெல்டா வைரஸைவிட அதிகமான வேகத்தில் பரவி அதன்புள்ளிவிவரங்களை முந்திவிடும்.
அது மட்டுமல்லாமல் ஒமிக்ரான் வைரஸில் இருக்கும் மாற்றத்துடன் கூடிய அதன் ஸ்பைக் புரதம் ஒருவர் உடலில் தடுப்பூசி மூலம் கிடைத்த நோய்தடுப்பாற்றலை குறைத்துவிடுகிறது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதன் மூலம் கிடைத்த நோய்தடுப்பாற்றலையும் குறைக்கிறது என முதல்கட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து அறிய தற்போது குறைந்த அளவு புள்ளிவிவரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.