• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

பல்புக்கே பல்பு கொடுக்கும் அதிகாரிகள் -தேனியில் தெருவிளக்கு மோசடி

ByA.Tamilselvan

Jun 17, 2022

தேனி மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளுக்கு எல்.இ.டி.பல்புகள் வாங்கியதில் 1 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
.கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, தென்கரை, வீரபாண்டி, க.புதுப்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, மேலச்சொக்கநாதபுரம், பூதிப்புரம், தேவதானப்பட்டி, ஓடைப்பட்டி ஆகிய பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி பல்புகள் பொருத்துவதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டது.‌ அதனடிப்படையில் 36 வாட்ஸ் ஒளித்திறன் கொண்ட ஒரு எல்.இ.டி பல்பு 9,987 ரூபாய்க்கு வாங்குவதற்கு அந்தந்த பேரூராட்சி நிர்வாகங்கள் ஒப்புதல் வழங்கின.‌ இதன்படி 10பேரூராட்சிகளுக்கு மொத்தம்1,300 பல்புகள், ஒரு கோடியே 29 லட்சத்து 83 ஆயிரத்து 100 ரூபாய்க்கு வாங்கப்பட்டன. கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டியில் இயங்கும் ஜே.ஆர். எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் ரவி எலக்ட்ரிகல்ஸ் ஆகிய கடைகளில் இந்த பல்புகள் கொள்முதல் செய்யப்பட்டன.
குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆய்வில், கொள்முதல் செய்யப்பட்ட இந்த வகை எல்.இ.டி. பல்பு ஒன்றின் குறைந்தபட்ச விலை 1200 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 2500 ரூபாய் வரை மட்டுமே இருக்கும் என கண்டறியப்பட்டது.‌ கூடுதலாக ஒரு பல்புக்கு 7487 ரூபாய்க்கு கணக்கு காட்டி கொள்முதல் செய்ததில் 97லட்சத்து 33ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பது அம்பலமானது.‌


இதுதொடர்பாக தேனி மாவட்ட பேரூராட்சிகளின் முன்னாள் உதவி இயக்குநர் விஜயலட்சுமி மற்றும் பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலர்கள் ஆண்டிபட்டி – பாலசுப்பிரமணியன், தென்கரை – மகேஸ்வரன் உள்ளிட்ட 11 பேர் மற்றும் க.புதுப்பட்டியைச் சேர்ந்த ஜமுனா, ரவி ஆகிய ஒப்பந்ததாரர்கள் என மொத்தம் 13 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 10ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பல்பு ஊழல் தற்போது வெளிச்சத்துக்கு வந்த நிலையில், பல்புக்கே ஒரு கோடி ரூபாய் என்றால். இன்னும் எதிலெல்லாம் எத்தனை கோடிகள் களவாடப் பட்டிருக்குமோ என குமுறுகின்றனர் பொதுமக்கள்.