• Sat. Apr 20th, 2024

தாலிபான்களை கொன்று குவிக்கும் வடக்கு படைகள்

By

Sep 5, 2021 ,

ஆப்கானில் பஞ்ச்ஷியரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 600 தாலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும், அமருல்லா சாலே தலைமையிலான எதிர்ப்புக்குழுவுக்கும் இடையிலான உச்சகட்ட மோதல் நடந்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே தாலிபான் பயங்கரவாதிகள், முழு ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர். கடந்த மாதம் 15ம் தேதி தலைநகர் காபூலை அவர்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
அதைத் தொடர்ந்து, 20 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்த தாலிபான்கள், தங்களது தலைமையில் நாட்டில் புதிய அரசு அமையும் என அறிவித்தனர். தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து சர்வதேச படைகள் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில் புதிய அரசை அமைப்பதில் தாலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தாலிபான்கள் கைப்பற்றிய போதும், இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் அவர்களால் கைப்பற்ற முடியாத நிலை இருந்தது. சுமார் 2 லட்சம் பேர் வாழும் பஞ்ச்ஷீர் மாகாணம் நீண்ட காலமாகவே தாலிபான்களுக்கு எதிராக போராடி வருகிறது.
1980களில் அரச படைகளுக்கு எதிராகவும், 1990-களில் தாலிபான்களுக்கு எதிராகவும் பஞ்ச்ஷீர் மாகாண போராளிகள் சண்டையிட்டனர். அந்த வகையில், தற்போதும் ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபராக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டுள்ள துணை அதிபர் அமருல்லா சாலே தலைமையில் பஞ்ச்ஷீர் போராளிகள் தாலிபான்களுடன் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தான், இரு தரப்பினருக்கும் இடையிலான மோதலில், 600 தாலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக பஞ்ச்ஷீர் போராளிகள் குழு அறிவித்துள்ளது. மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாலிபான்கள் பிடிபட்டுள்ளனர் அல்லது சரண் அடைந்துள்ளனர் என்றும் போராளிகள் குழு தெரிவித்துள்ளது.
அதே சமயம், பஞ்ச்ஷீர் மாகாணத்தை கைப்பற்றும் முயற்சி தொடர்ந்து நடப்பதாக தாலிபான்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது. தலைநகர் பசாரக் செல்லும் சாலையில் கண்ணிவெடிகள் அதிக அளவில் இருப்பதால், முன்னேறிச்செல்லும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தாலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *