தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்கவேண்டும் எனஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டிருந்தது இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த உத்தரவை வாபஸ் பெறுவதாக தற்போது அறிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று, முதல்வர் முக.ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்!மக்களின் உணர்வுகளை மதியுங்கள்!
குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்!’’ என்று எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி பெயர் தேவையில்லை என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கடும் எதிர்ப்பை தொடர்ந்து ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியில் தஹி என்று குறிப்பிட வேண்டும் என்ற உத்தரவை ஒன்றிய அரசு வாபஸ் பெற்றது. ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி பெயரை பயன்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டிருந்தது. தயிர் பாக்கெட்டுகளில் இந்தி பெயர் பிரதானமாக இடம்பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழ், ஆங்கிலத்தில் மட்டும் பெயர் இருந்தால் போதுமானது என புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.