தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலை வரும் 15ம் தேதிக்குள் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலை நடத்த கால அவகாசம் வழங்கக் கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனிடையே திருநெல்வேலி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களின் மாவட்ட ஊராட்சி குழு தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்களுக்கான இட ஒதுக்கீட்டு பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. இதையடுத்து தேர்தல் பணிகள் குறித்து அனைத்து கட்சியினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திருநெல்வேலியில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அதிமுக அமைப்பு செயலாளரும், நெல்லை மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், கன்னியாகுமரி எல்.எல்.ஏவுமான தளவாய் சுந்தரம் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாகவும், அனைவரும் வெற்றி பெறுவதற்கான தேர்தல் பணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.