அமெரிக்க அதிபருக்கு நெருங்கிய நண்பராக இருக்கும் எலான்மஸ்க்கின் டெஸ்லா நிறுவன கார் விற்பனையகங்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபரான டிரம்ப்பின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் எலான் மஸ்க் இருக்கிறார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு எலான் மஸ்க் ஆதரவு அளித்திருந்தார். டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் எலான் மஸ்க் தலைமையில் அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) செயல்பட்டு வருகிறது. அமெரிக்க அரசு நிர்வாகத்தில் அவர் செலுத்திவரும் ஆதிக்கத்தால், அந்நாட்டில் அவருக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அரசின் செலவினத்தைக் குறைப்பதற்கான மஸ்கின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெஸ்லா நிறுவனம் டிரம்புடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டு வந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள டெஸ்லாவின் 277 ஷோரூம்கள் மற்றும் சேவை மையங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பைத் தீவிரப்படுத்த முயன்றனர். நியூ ஜெர்சி, மாசசூசெட்ஸ், கனெக்டிகட், நியூயார்க், மேரிலாந்து, மினசோட்டா மற்றும் டெக்சாஸில் உள்ள டெஸ்லா இடங்களில் பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல பிரிட்டன் தலைநகர் லண்டன் உள்பட சில ஐரோப்பிய நகரங்களிலும் டெஸ்லா விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டம் நடைபெற்றது. இந்த எதிர்ப்பு காரணமாக டெஸ்லா கார்களை வாங்கியவர்கள், அவற்றை விற்பனை செய்துவிட முயற்சிப்பதாகவும், அத்தகைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லா வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் பிற நாசவேலைச் செயல்களும் பதிவாகியுள்ளன.
எலான்மஸ்க்கிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்
