• Thu. Mar 28th, 2024

நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் தள்ளுபடி

ByA.Tamilselvan

Jun 17, 2022

நளினி, ரவிச்சந்திரன் தங்களை முன்கூட்டியே விடுதலை தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த தீர்மானத்தின் மீது கவர்னர் எந்த முடிவு எடுக்கவில்லை.
இதையடுத்து, கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நளினி வழக்கு தொடர்ந்தார். அதே போல, ரவிச்சந்திரனும் விடுதலை செய்ய கோரி வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முக சுந்தரம், மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 6-ந்தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பிறப்பித்தனர். தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு தன் சிறப்பு அதிகாரத்தை கொண்டு விடுதலை செய்துள்ளது. அது போன்ற சிறப்பு அதிகாரம் இந்த ஐகோர்ட்டுக்கு இல்லை. எனவே ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகியோரை விடுதலை செய்ய முடியாது. அவர்களது மனுக்கள் விசாரணைக்கு உகந்தது இல்லை. அதனால் இரு மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *