• Tue. Apr 30th, 2024

நாகை – இலங்கை கடற்பயண திட்டம் மாற்றியமைப்பு..!

Byவிஷா

Oct 16, 2023

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு செல்லும் கப்பல் பயணத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகத்திற்குப் பயணிகள் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காகக் கேரள மாநிலம் கொச்சியில் செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் தயார் செய்யப்பட்டது. அந்தக் கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கடந்த 7 -ம் தேதி கொண்டு வரப்பட்டது. 8 -ம் தேதி நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்குச் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
இதனையடுத்து, கடந்த 14-ம் தேதி, நாகையிலிருந்து இலங்கைக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை, டெல்லியிலிருந்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பாரதம் – இலங்கை இடையே புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேலும், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணம் செய்ய நபர் ஒன்றுக்குக் கட்டணம் ரூ.6,500 என்றும், மற்றும் ஜிஎஸ்டி 18 சதவீதம் என மொத்த கட்டணமாக ரூ7,670 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
வடகிழக்கு பருவ மழை வரை தொடர்ச்சியாக இந்த கப்பலை இயக்க திட்டமிடிருந்த நிலையில், திடீரென இதன் பயணத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள், புதன், வெள்ளி என 3 நாட்கள் மட்டுமே பயணிகள் கப்பல் இயக்கப்படும் என இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *