• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

என்.எல்.சி. பணி நியமனப் பட்டியலில் ஒரே ஒருவர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்-சு.வெங்கடேசன் எம்.பி.

ByA.Tamilselvan

May 5, 2022

என்.எல்.சி பணி நியமனப் பட்டியலில் 300 பேரில் ஒரே ஒருவர்தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு …நெய்வேலி அனல் மின் கழகத்தில் 300 பட்டதாரி நிர்வாக பயிற்சி பொறியாளர் நியமனங்களில் முன் அறிவிப்பின்றி கேட் (GATE) மதிப்பெண்களை தேர்வுத் தகுதியாக மாற்றியதை கண்டித்தும் அதனால் இந்த தேர்வு முறைமையை ரத்து செய்ய வேண்டுமென கோரி ஏற்கெனவே என்.எல்.சி தலைவர் இராகேஷ் சர்மா அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
இதனையொத்த நிறுவனங்களில் தேர்வுத் தகுதி குறித்து முன் அறிவிப்பு தந்து தேர்வர்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. 2018 இல் இதே என்.எல்.சி யில் கூட ‘கேட்’ மதிப்பெண் தகுதி ஆக்கப்பட்ட போது அறிவிக்கை உரிய அவகாசத்தோடு செப்டம்பர் 2017 ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டது. இம்முறை இங்கேயும் உரிய முன் அறிவிப்பு தந்திருந்தால் விருப்பமுள்ள தேர்வர்கள் கேட் (GATE) தேர்வை எழுதி இருப்பார்கள். இப்படி முன் அறிவிப்பின்றி தேர்வு தகுதியை மாற்றியது அநீதி, சம வாய்ப்பை மறுப்பது எனச் சுட்டிக்காட்டி இருந்தேன். மேலும் இப்பதவிக்கான நியமனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் இறுதி தேர்வுப் பட்டியலில் இடம் பெறுவது அரிதாகி வருகிறது எனக் கவலையையும் தெரிவித்து, ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தேன்.
தற்போது 300 பேர் கொண்ட நியமன பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. அப்பட்டியலில் உள்ள பெயர்களைப் பார்க்கும் போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஒரே ஒருவர்தான். ஆகவே இந்த தேர்வு முறையை நிறுத்தி விட்டு உரிய அவகாசத்துடன் தேர்வுத் தகுதிகளை அறிவித்து புதிய நியமனங்களை மேற்கொள்ளுமாறு நெய்வேலி அனல் மின் நிலைய நிர்வாகத்தை அறிவுறுத்துமாறு ஒன்றிய நிலக்கரி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.