• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

வேடசந்தூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் திருவிழா..,

வேடசந்தூர் அருகே உள்ள சுக்காம்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் 7 சிறுமிகளை கன்னிமார் தெய்வங்களாக பாவித்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர் நல்லூர் ஊராட்சி சுக்காம்பட்டியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை 1ம் தேதி சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு 13-ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று (திங்கட்கிழமை) இரவு சுக்காம்பட்டி கோவில் வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நடுத்தோப்பூர் சாமி கிணற்றுக்கு சென்று முத்துமாரியம்மன் கரகம் அலங்காரம் செய்து 7 சிறுமிகளுக்கு கன்னிமார் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்ட கரகம் ஊர்வலமாக புறப்பட்டது உடன் 7 சிறுமிகள் கையில் நெய் விளக்கு ஏந்தி ஊர்வலத்தில் முன்னதாக நடந்து சென்றனர். சுக்காம்பட்டி கோவிலுக்கு அம்மன் கரகம் கொண்டு வந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கரூர் காவேரி ஆற்றில் இருந்து கலசங்கள் எடுத்துவரப்பட்ட புனித நீர் குடங்கள் மற்றும் பால்குடங்கள் நடுத்தோப்பூரில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டது.

மாவிளக்கு மற்றும் அக்கினிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதனை அடுத்து கோவில் முன்பு 7 சிறுமிகளை கன்னிமார் தெய்வங்களாக பாவித்து அவர்களிடம் ஆசி பெற்று 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பய பக்தியோடு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதை அடுத்து வேண்டுதலுக்காக பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை வைத்து எடைக்கு எடை நாணயம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கு புனித தீர்த்தம் மற்றும் பால்குடங்களைக் கொண்டு மூலவருக்கு செலுத்தி தீபாரதனை காட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏரியோடு, தோப்பூர், கோவிலூர், வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்கள் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், முத்துமாரியம்மன் வழிபாட்டு மன்றம் மற்றும் தோப்பூர், சுக்காம்பட்டி கல்வித்தந்தை காமராஜர் இளைஞர் நற்பணி சங்கத்தினர் செய்து இருந்தனர்.