• Sat. Feb 15th, 2025

சென்னை ஐஐடி இயக்குநரின் பேச்சு பொறுப்பற்றது… இரா.முத்தரசன் கண்டனம்

ByIyamadurai

Jan 20, 2025

புகழ்பெற்ற ஆராய்ச்சி மையமாக திகழும் சென்னை ஐஐடி இயக்குநர் பொறுப்பில் இருக்கும் காமகோடி, பல நூற்றாண்டு காலம் பின்னோக்கி கிடக்கும் அனுபவ தகவலுக்கு, அறிவியல் தரச்சான்று வழங்கி பேசியிருப்பது பொறுப்பற்ற பேச்சாகும்.என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, சென்னையில் நடந்த மாட்டுப் பொங்கல் நிகழ்வில் பேசும்போது, தனது “தந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் கோமியம் (கோமூத்திரம்) குடித்ததால் குணமானது” என்று கூறியுள்ளார்.

கோமியத்தின் மருத்துவப் பண்புகள் குறித்து அறிவியல் பூர்வமாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை. நவீன விஞ்ஞானம் மருத்துவத்தில் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளை நடைமுறைக்கு தந்திருக்கும் நிலையில், புகழ்பெற்ற ஆராய்ச்சி மையமாக திகழும் சென்னை ஐஐடி இயக்குநர் பொறுப்பில் இருக்கும் காமகோடி, பல நூற்றாண்டு காலம் பின்னோக்கி கிடக்கும் அனுபவ தகவலுக்கு, அறிவியல் தரச்சான்று வழங்கி பேசியிருப்பது பொறுப்பற்ற பேச்சாகும்.

மனித உழைப்புக்கு உதவிய, உற்பத்தி ஆற்றலை பெருக்கிய கால்நடைகளின் உழைப்பை போற்றும் மாட்டுப் பொங்கலில், கால்நடைகளின் உழைப்பின் முக்கியத்துவத்தை பாராட்ட வேண்டிய இடத்தில், ஐஐடி இயக்குநர் அதன் கழிவை பயன்படுத்தும் பரப்புரையில் ஈடுபட்டதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது,” என்று கூறியுள்ளார்.